ஆடிகள்















காட்சிகளும் கோணங்களும்
மாறியபடியே இருக்கும்
ஆடியொன்று வைத்திருக்கிறேன்
நானும்

பிரம்மம் தன் முகம்பார்த்து
இருப்பென எழுந்துவரும்
சின்னஞ்சிறு குழியாடி

காலத்தில் பின்னோக்கி நகரவும்
கனவுகளில் முன்னோக்கி புனையவும்
கூடிய குவியாடி

பூவுக்குப் பூவையும்
புன்னகைக்கும் அதையேதான்
திருப்பிக்காட்டும்
எளிய கண்ணாடிதான் என்றாலும்
காட்சிகளை மறைத்துக்கொள்ளும்
கள்ளத்தனமும் பழகியதுதான்

ஒரு சொல்லுக்குச் சிதறி
ஒரு புன்னகைக்கு மீண்டும்
புதியதாய்ச் சேரும் மாயக்கண்ணாடி

யாரும் வந்து எதையும்
வரைந்துவிட்டுப் போகும்படி நிற்கும்
நிலைக்கண்ணாடிதான் - ஆனாலும்
நான் காட்சிகளை சேமித்துவைக்கும்
கண்ணாடிக் கருவூலமும் அதுவேதான்

இந்த ஆடியில் விழும்பிம்பம்
நிலைப்பிம்பம்
காலத்தில் பின் அதுவே
நீர்ப்பிம்பமும்

வரைந்துப் பார்க்கவே
வண்ணங்களை சேர்க்கும் அது
வாழ்ந்து தீர்க்கவே
ரசமிழந்தும் போகிறது

தூரத்தையும் காலத்தையும்
தொலைவுவரை பார்க்குமென்றாலும்
தன் முகத்தை அதிலே
பார்த்துக்கொள்ள மட்டும்
தயங்கியபடியேதான் நிற்கும்.


நன்றி : சொல்வனம்



No comments: